Wednesday, September 30, 2015

வாய் பந்தல்

தவிக்கும் வாய்க்கு
தண்ணீர் தர
மறுத்துவிட்டு
கடிக்கும் பாம்புக்கு
பால் வார்க்க
விரைகிறோம்

பக்கத்து வீட்டுக்காரன்
பட்டினியை
விமர்சனம் 
செய்துவிட்டு
நம்ம வீட்டில்
மட்டன் பிரியாணியை-ஒரு
கட்டு கட்டுகிறோம்,

குடி, குடியை 
கெடுக்குமென
விளம்பரம் 
செய்துவிட்டு
கடையை திறந்துவைத்து
வியாபாரம் 
செய்கிறோம்

படிப்பவனுக்கு
வேலையென்று 
சொல்லிவிட்டு
பணம் படைத்தவனுக்கே
முன்னுரிமை 
கொடுக்கிறோம்


பெண்ணே
பூமியென்று 
சொல்லிவிட்டு
மண்ணுக்கு 
கொடுக்கும்
மரியாதையைக்கூட- ஒரு
பெண்ணுக்கு 
கொடுக்க மறுக்கிறோம்

கையேந்தும் 
பிச்சைக்காரனுக்கு
சில்லரை இல்லையென
சொல்லிவிட்டு
கோடிகளில் புரளும்
கோவில் உண்டியலில்
கொட்டுகிறோம்

கோவணம் கட்டிய 
விவசாயியை
வெய்யிலில்
காக்க வைத்துவிட்டு
வெள்ளை வேஷ்டி
கட்டியவனுக்கு
விருந்து வைத்து
மகிழ்கின்றோம்
இப்படிபட்டவர்களைதான்
மனிதர்களென சமுகம்
அங்கீகாரம் செய்கிறது
நேர்மையானவர்களை
'பிழைக்கத்தெரியாத
பைத்தியக்காரன்'-என
ஒதுக்கி வைக்கிறது

}♥ நாகை ஆசைத்தம்பி ♥{

Pages