Saturday, December 23, 2017

கேணிக்கு அருகில் ஒரு தோணி

நீலத் தோனியிலமர்ந்து
நீள்வானைப் பார்த்தேன்
நீண்ட நாட்கள் கடந்தும்
நீங்கா நினைவலைகள்
என் மன நீரோட்டத்தில்
நீந்திக் கொண்டிருக்கின்றன.

ஆடியும் பாடியும்
தேடியும் நண்பர்களுடன்
ஒன்றாய் கூடியும்
ஓடி விளையாடி
திரிந்த காலமது

மஹவான்கடவல குளம்
அது எமதூர் வளம்
மாரியில் நீர் மட்டம் எழும்
கோடையில்- அதிலுள்ள
மீன்கள் அழும்



காலை , மாலை
எப்போதும்
கால, நேரம்
வரையறையின்றி
கூடி விளையாடிய பின்
ஓடிப் போய்
குதித்து விளையாடும்
தண்ணீர் மைதானம்

நீண்டு படர்ந்திருக்கும்
நீர்ப் புதர்களினுள்ளே
நீந்தி விளையாடி
நிதம் நீராடினோம்

மேகம் அழுது
மேய்ப்பர் சோகம்
போக்கி-மானுடர்
மழைத் தாகம்
தீர்க்கும் பொழுது
வேகம் கொண்டு
வெகுண்டெழுமே வெள்ளம்
ஊரைச் சுற்றி..



புழுதியை விரட்டியடிக்கும்
புனல் ஓட்டப்பந்தயத்தில்
வழுவி விளையாடி
சேற்றைத் தழுவிக்கொள்வோம்

நண்பர்களுடன் கூடி
நண்பகல் நேரத்திலும்
நன்றாக நீராடி
நனைந்தோமே இன்ப
மழையினில்...

நீர் வற்றினாலும் கூட
நீங்காது எம் தாகம்
குறைந்த நீரிலும்
குளிர்ச்சி பெற்றோம்
குதித்து விளையாடி
குளித்தபடியே.....

காலங்கள் கடந்த பின்னும்
கரையாத ஞாபகங்கள்
கணப்பொழுது தோன்றினாலும்
கண்ணெதிரே நீரூரும்

♥இ_ரசிகன்♥

Pages