Wednesday, February 14, 2018

மாறும் விந்தையுலகில் மாறாத தந்தையுலகம்

மந்தை மேய்த்தாயினும்
தந்தை தனையன் காத்தார்..
மந்தையைப்போல்
இன்று தனையன்
தந்தையை காக்கின்றான்......

கருவாடு வாங்கியேனும்
தந்தை அள்ளிக்கொடுத்தார் ,...
கோழிக்காலாச்சே என-தனையன் கில்லிக்கொடுக்கின்றான்..

தோள்மேல் சுமந்து
தந்தை அகிலம்
காட்சிப்படுத்த,
கால்மேல் காலிட்டு
தனையன் உலகம்
காட்சிப்படுத்துகின்றான்




தொலைக்காட்சிப்பெட்டியில்,
தொலைந்துபோகமாட்டாராவென ஒரு பக்கம் அவன் மனைவி
முணுமுணுக்க
நாடகம் பார்க்க நேரம்
நெருங்கிவிட்டதாமே..

சிறுவயதில் தந்தைக்கு
தனையன் சிறுநீரபிஷேகம் நடத்தினான்,
வெள்ளைச்சட்டை ஈரமாகியும்
பிள்ளை சேட்டையை ஓரமாக்கமாட்டார்

அதே தந்தை வயதுடைந்து தன்னையரியாது சலம் சுரக்க, சலகூடத்தருகில் அறையையமைத்து,
'தங்கவீரனென' பதக்கம் கொடுப்பதற்கு பகரமாக
'அங்கவீனர்' எனும்
அடைமொழியை உரக்கச்சொல்லாவிடினும்
உணர்த்தச்செய்துவிடுகிரான் தனையன்....



பயணமென்றாலே தனையன் தகப்பன் மடியில்
துல்லித்துல்லி வேடிக்கை
பார்க்க - இன்று
உல்லாசப்பயனமென்று
குடும்பம் வெளிக்கிட,
தந்தை வீட்டைக்காக்கும் காவலனாய் கதவடியில்....

மாடாய் உழைத்து
மாடி வீடு
கட்டினார் தந்தை
தனையன் சுவைக்க...

தனையனோ தான் பெற்ற பிள்ளைக்காய் பசுவாய் நடாத்துகின்றான் தந்தையை
தன் மகனுக்கு
பால்பக்கேட் சுமக்க....



பெருநாள் வந்தால்
தனையனுக்கு திருநாள்..
விதவிதமாய் ஆடை வாங்கி அழகுபார்ப்பார் தந்தை...
வெள்ளை வேட்டியை கவனமாய்க்கொடுத்து காக்க சொல்கின்றான் தனையன்,
கபனுக்கும் தேவைப்படலாமென்றென்னியோ!...

பெருநாளைக்கு தந்தை ஆடைவாங்காத நாளுண்டு.
தனையனுக்கு இரண்டு
ஆடைக்கும் குறைந்த
நாளுண்டா???

துவிச்சக்கர வண்டியில் மிதியாமிதித்து பாடசாலை அனுப்பினார் தந்தை,
முச்சக்கர வண்டியில்
ஓட்டுனரோடு ஒப்படைத்து வைத்தியசாலை அனுப்புகின்றான் தனையன்-பாவம் அவனுக்கு வேலைப்பளு நிறைந்துவிட்டதாம்



தந்தையாய் மாறியபின் தந்தையுணர்வை புரிந்தோர் எண்ணிலடங்குவார்....
பிள்ளைப்பருவத்தில்
தொல்லையாய் எண்ணுவோர்
எண்ணிலடங்காதோர்.

ஏற்றிவிட்ட தந்தைக்கு நன்றிசெலுத்த நேரமில்லை,
நன்றிசொல்லும் காலம் வந்ததும் ஏற்றிவிட்ட தந்தை இல்லை.



எனக்கு அவர் தந்தையென்றநான் அறிமுகமாகவில்லை,
அவருக்குத்தான்
நான் மகன் என்றே
என்னை அறிமுகப்படித்தினான் இறைவன்...

♥ ~ஹாஸிர் நஜீப் ஸலபி~♥


Pages