Thursday, May 5, 2016

உலகை நம்பாதே உன்னை நம்பு

நீ பழக்கத்தின்
கைதியாய் மாறிவிடாதே
உன் சிந்தனையில்
எப்போதும்
மாற்றத்தை விரும்பு
அவ்வாறே உன் அன்றாட
கண்ணோட்டத்தையும் மாற்றிக்கொள்

இது தான்
புதுமை படைப்பின்
அடி நாதம்
சமூகம் உன்னைச்
சுற்றி வட்டம் போடும்
வளைந்து விடாதே
சில கட்டிடம் கட்டி
அதைத்தான் உலகம்
என்று மொத்தமாய்
சேர்ந்து பேசும்
எண்ணிக்கையில்
ஏமாந்து விடாதே


தொட்டதெற்கெல்லாம்
முடிவு சொல்லும்
கண்ணை மூடி
வாழ்ந்து விடாதே
ஏன்?, எதற்கு? ,
எப்படி? என்பதைக்
கேட்க மட்டும்
மறந்து விடாதே

உன் முன்னேற்றம்
கண்டு சில
தடுமாற்றம் வரலாம்
கண்டுகொள்ளாதே
உன் பயணத்தில்
சிலர் தடை கற்கள்
இடலாம்
நின்று விடாதே


உன் விட்டம் கண்டு
பலர் பட்டம்
சூட்டலாம்,
சிலர் மட்டம் தட்டலாம்
இன்னும் சிலர்
திட்டம் தீட்டலாம்
தளர்ந்து விடாதே

உன் பாதையை
நீயே தெரிவு செய்
அதில் பயணிப்பது
நீ மட்டுமே
அவர்கள் அல்ல
பலரிடம்
ஆலோசனை கேள்!
ஆனால்
முடிவு உன்னுடையதாகவே
இருக்கட்டும்


நீ நடக்கும் பாதையில்
மலர்களை எதிர்பார்,
அதற்காக ஒரு
முள் கூட இருக்காது
என நினைத்திடாதே

நேராக செல்லும்
உன் பாதையில்
பிரிவுகள் வரலாம்,
பள்ளங்கள் வரலாம்
வளைவுகள் வரலாம்
பயணம் மட்டும்
இலக்கை நோக்கியே
அதில் மட்டும்
தொய்வு வராமல்
பார்த்துக்கொள்


உன் மேல்
நம்பிக்கை வை
துணைக்கு இறைவனை
மட்டுமே
அழைத்துக் கொள்
மூன்றாம் நபர்
சோற்றுக்கு உப்பாய்
இருக்கட்டும்
இடையில் உடைந்தாலும்
உன் பயணம்
தொடரட்டும்

♥{ Amlan Mohamed }♥



If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Pages