ஆமாம்
இது உண்மை தான்,
அரைவயிறு
உணவு உண்டு
அதிக காலமாகி விட்டது,
பசி கண்ட இடமெல்லாம்
வெந்து அழிகிறது
அந்த உணவகத்தின்
அருகே
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
சிதறிக் கிடந்த
சோற்றுப் பருக்கைகளைப்
பார்க்கும் போது
பாவப்பட்ட வயிறு
பசியில் புலம்புகிறது
சமூக ஆர்வலர்களின்
பசி பற்றிய
போராட்டங்கள் மட்டும்
அட்டைப் பட
விளம்பரமாய்,
வசந்த காலம்
தொலைத்து
பலவீனமாக நாங்கள்
ஈரக்குலை
துடிக்கிறது,
நாவறண்டு கிடக்கிறது,
இருந்தாலும்
இங்கே
கடவுள் குளிக்க மட்டும்
பால் மிச்சம்
இருக்கிறது
உணவில்லையெனில்
உலகை அழிப்பதாக
ஒருசேர உச்சமாய்
கூக்குரல்கள் எழுந்தாலும்,
பசிக்கு உணவு தர
ஒரு குரலும்
வருவதில்லை
இப்போது கூட
எங்கோ ஒரு வயிறு
சத்தமில்லாமல்
சொல்லியிருக்கும்
அய்யோ பசிக்குதே!!!
♥{ மிதுன் }♥